
அரசாங்கத்தின் முன்னணி வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக அரிசி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தினை நாடு முழுவதும் ஏப்ரல் மாதத்தில் நடைமுறைப்படுத்தியமை தொடர்பாகத் தெளிவுபடுத்தும் ஊடகக் கலந்துரையாடல் 03.05.2024 அன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்னவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாட்டின் 25 மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்கள், மேலதிக மற்றும் உதவி அரசாங்க அதிபர்கள் கலந்து கொண்டு தமது மாவட்டங்களில் இவ்வேலைத் திட்டத்தில் எவ்வளவு நிதி ஒதுக்கீட்டினால் எத்தனை குடும்பங்களை எதன் அடிப்படையில் தெரிவு செய்து அரிசி வழங்கியமை குறித்துத் தெளிவுபடுத்தினார்கள்.
இதில் நிகழ்நிலையில் உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளீதரன் அவர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தின் 156,368 குடும்பங்கள் இலவச அரிசியைப் பெறுவதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் இது வரை 96,605 குடும்பங்களுக்கு அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளன. மீதமாகவுள்ள குடும்பங்களுக்கும் அரிசியை வழங்கிப் பூரணப்படுத்தவுள்ளதுடன் மே மாதத்திலும் இதே எண்ணிக்கையான குடும்பங்களுக்கு அரிசி விநியோகிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன் அரிசி விநியோக வேலைத்திட்டத்தின் குறைபாடுகளைக் கண்டறிவதற்காக மாவட்ட செயலகத்தின் பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம கணக்காளர் மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரைக் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளதாகவும், இது வரை எவ்வித முறைப்பாடுகளும் இன்றி அரிசி விநியோகம் வெற்றிகரமாக இடம்பெறுவதாகவும் அரசாங்க அதிபர் தெளிவுபடுத்தினார். இக்கலந்துரையாடலில் கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. ஜி. விஜேசிறி, களுத்துறை மாவட்டத்தின் கினிகே பிரசன்ன ஜனக குமார மற்றும் கம்பஹா மாவட்டடத்தின் லலிந்த கமகே ஆகிய அரசாங்க அதிபர்கள் நேரடியாகவும் ஏனைய மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட ஊடகப் பிரிவுகளின் ஒத்துழைப்புடன் நிகழ்நிலையிலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





