
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம அவர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் காரைதீவு பிரதேச செயலகத்தில் 16.05.2024 அன்று இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் மயிலத்தமடு, மாதவனை, உகன வெல்லாவெளி, உகன நாவிதன்வெளி மற்றும் வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுகளுக்கிடையிலான எல்லை காணி பிரச்சினைகள், கல்முனை மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலக மாவட்ட எல்லைகள், கால்நடை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை மற்றும் காணி பிரச்சினைகள் தொடர்பாக சமூகமாக கலந்துரையாடி அவற்றை தீர்பதற்கான ஆலோசனைகள் அரசாங்க அதிபர்களினால் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. இதன் போது எல்லை பிரதேசத்தில் காணிகளை பிடித்தல், சட்டவிரோத காணி பயிர்ச்செய்கைகளை நிறுத்துதல் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. இக் கலந்துரையாடலில் மகாவலி அதிகார சபையினரினால் மாவட்டத்தில் மேற்கொள்ளவுள்ள செயற்திட்டங்கள் தொடர்பாக அளிக்கை செய்யப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் நாம் அனைவரும் இலங்கையர் எனும் அடிப்படையில் இன மத பேதமின்றி எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத்தருவதற்கு முனைப்பாக செயற்பட்டுவருவதாக கருத்து தெரிவித்தார்.
இதில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜகதிசன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந், திருமதி . நவரூபரஞ்சினி முகுந்தன் (காணி), அம்பாறை சிரேஸ்ட நில அளவைகள் அத்தியட்சகர் ஜி.ஆர்.எல் பேரேரா, மட்டக்களப்பு சிரேஸ்ட நில அளவைகள் அத்தியட்சகர் கே.தட்சனாமூர்த்தி , பிரதேச செயலாளர்கள், மகாவலி அதிகாரி, காணி உத்தியோகத்தர்கள், மற்றும் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.






