சர்ச்சைக்குள்ளாயிருக்கும் கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பதாகவும் இதற்கான நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் மட்டக்களப்பு ஆயரினால் கூட்டப்பட்ட நல்லிணக்க குழு கூட்டத்தில் தெரிவித்தார்.

தற்போதைய சுமூகமற்ற நிலையை சீராக்கும் பொருட்டு மாவட்ட நல்லிணக்க குழு மட்டக்களப்பு ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்கள் தலைமையில் இந்த நல்லிணக்க கூட்டம் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் கூட்டப்பட்டிருந்தது. இக் கூட்டத்தில் சர்வமத அமைப்பின் பிரதிநிதிகள், சிவில்  அமைப்பின் பிரதிநிதிகள், மற்றும் மதகுருமார்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் தற்போது எழுந்துள்ள சீரற்ற சூழ்நிலையைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகள் குறித்த அமைப்பு பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது. ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்கள் கருத்து வெளியிடுகையில் மாவட்டத்தில் பிரச்சனைகள் ஏற்படுகின்ற வேளையில் சுமூகமாகவும், இன நல்லுறவு பாதிக்கப்படாதவகையிலும், தீர்த்துவைக்க முன்வரவேண்டும். இந்த மாவட்டத்தின் நன்மை கருதி அரசாங்க அதிபரினால் எடுக்கப்படுகின்ற முன்னேற்றகரமான நடவடிக்கைக்கு எல்லோரும் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என்றும் தனது முழு ஆதரவும் அரசாங்க அதிபருக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அரசாங்க அதிபர் கருத்து வெளியிடுகையில் அரசாங்க அதிகாரி என்ற முறையில் நீதிமன்றத்தின் கட்டளையை நிறைவேற்ற வேண்டியது தமது கடமை என்றும் எனினும் குறித்த உடற்பாகம் கள்ளியங்காட்டில் புதைக்கப்படுவதற்கு தான் எந்த அனுமதியினையும் வழங்கவில்லை என்றும் தெரிவித்தார். குறித்த உடற்பாகங்களை நகரவாடியில் அடக்கம் செய்வதற்கு குறித்த பள்ளிவாசல் நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்ததாகவும் அங்கும் இவ் உடற்பாகங்களை புதைக்க கூடாது என மாநகர சபை உறுப்பினர் செல்வி மனோகரன் தலைமையிலான குழு தடைவிதித்ததால் இந்த உடற்பாகங்களை அடக்கம் செய்வதற்கு தன்னால் முடியாது இருப்பதாக குறித்த வழக்கின் பொலிஸ் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் தன்னால் நடவடிக்கை எடுக்க முடியாததாகவும் ஏற்கனவே அறிவித்ததாகவும் கூறினார்.

தற்கொலை குண்டுதாரிகள் சாய்ந்தமருதில் கொல்லப்பட்டபோதிலும் அம்பாறை வைத்தியசாலை வைக்கப்படடிருந்த காத்தான்குடியில் பிறந்த 15க்கு மேற்பட்ட சடலங்கள் உகனை பிரதேசத்தில் உள்ள பௌத்த இந்து மயானத்தில் புதைக்கப்பட்டிருந்ததாகவும் கட்டுவாப்பட்டியில் தற்கொலை குண்டுதாரியின் சடலங்கள் நீர்கொழும்பு பொதுமயானத்தில் நீதிமன்ற உத்தரவில் புதைக்கப்பட்டதாகவும் மட்டக்களப்பில் நீதிமன்ற உத்தரவினை அமுல்ப்படுத்த முடியவில்லை, எனினும் தன்னால் அறிவுறுத்தப்படாத இந்த உடற்பாகங்கள் புதைக்கப்பட்டது தான் அறிந்திராத விடயம்  என்றும் தெரிவித்தார்.

கடந்த 4½ வருடகாலத்தில் இம்மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திப்பணிகளை தொடர்வதற்கு சில அமைப்புகள் தடங்கல் போட்டு வந்துள்ளதாகவும் வடமாகாணத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் தடங்கல் இன்றி நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்த நிலைமை எம் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பெரும் பாதிப்பு எனவும் எதிர் காலத்திலாவது அரசாங்க அதிகாரிகள் இம் மாவட்டத்தின் நன்மை கருதி எடுக்கப்படுகின்ற நல்ல அபிவிருத்திக்கு உதவ வேண்டும் எனவும் கூறினார்.

தனது சுகபோகத்திற்காக நாட்டை விட்டு வெளியேறி சுகபோகங்களை அனுபவிக்கின்றவர்கள் அங்கிருந்து கொண்டு மட்டக்களப்பின் செயற்பாடுகளுக்கு விமர்சனம் தெரிவிப்பதை தவிர்த்து நாட்டுக்கு வந்து இதன் பங்குதாரர்களாக செயற்படுவது பொருத்தமானது என்றும் கூறினார். இதைவிடுத்து அவலட்சனமான கருத்துக்களை அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு முகநூலில் தெரிவிப்பது அநாகரிகமற்ற செயல் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

DSC 0193DSC 0238DSC 0255DSC 0258DSC 0247DSC 0225DSC 0230DSC 0237 minDSC 0243DSC 0212DSC 0204DSC 0260DSC 0215DSC 0219DSC 0222