கிழக்கு மாகாண கல்வி, தகவல் தொழில்நுட்ப கல்வி, முன்பள்ளி கல்வி, விளையாட்டு பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு மற்றும் மீள்குடி யேற்ற அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களங்கள் நடாத்திய மாகாண தமிழ் இலக்கியவிழா கடந்த 22.09.2019 அன்று காலை மட்டக்களப்பு நகரில் பல்வேறு கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் பண்பாட்டுப்பேரணியுடன் ஆரம்பமாகியது.

கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ், முஸ்லிம், பறங்கியர், உட்பட பல இன மக்களின் பாரம்பரிய கலாசாரங்களான நடனம், கிராமிய நடனம், றபான் அடித்தல், கோலாட்டம், செம்பு நடனம், நாட்டுக்கூத்து, பறங்கியர் நடனங்கள், மயிலாட்டம் உட்பட பல கலாசார நிகழ்வுகள் இப்பேரணியில் இணைந்திருந்தன. இந்த பண்பாட்டுப்பேரணிகள் மட்டக்களப்பு புனித செபஸ்தியார் ஆலயம், தாண்டவன்வெளி மற்றும் புனித காணிக்கை மாதா ஆலயத்திலுமிருந்தும் இரு வழியாக புறப்பட்டு விழா நடைபெறும் அரசடி தேவநாயகம் கலையரங்கில் நிறைவுபெற்றது.

இந்த ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் திரு.தியாகராஜா சரவணபவான், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.சரவணமுத்து நவநீதன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இதனைத்தொடர்ந்து பேராசிரியர் திரு.செ.யோகராசா தலைமையில் "பிரதிகளின் உயிர்ப்பு" என்ற தலைப்பில் பேசாப்படைப்பை பேசுதல் ஆய்வரங்கம் இடம்பெற்றது. "பவள சுந்தரம்மாளின் புனைவுவெளி" என்ற தலைப்பில் கிழக்கு வளாக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.ரூபி வலன்றினா பிரான்சிஸும், "அபுவக்கரின் கவிமொழி" என்ற தலைப்பில் கிழக்கு வளாக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் திரு.ரமீஸ் அப்துல்லாவும், "சாருமதியும் படைப்பும் செயல்பாடும்" என்ற தலைப்பில் மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திரு.வே.தவராஜாவும், "பாண்டியூரானின் படைப்புவெளி" என்ற தலைப்பில் ஆசிரியர் திரு.மேகராசாவும், வ.இ.ராசரத்தினத்தின் "பேசப்படாத படைப்புலகம்" என்ற தலைப்பில் மென்பொருளாளர் திரு.மு.மயூரனும் ஆய்வுரைகளை நிகழ்த்தினர்.

23.09.2019 அன்று நிறைவுபெற்ற இரண்டாம் நாளான இறுதி நாள் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கெளரவ திரு.ஷான் விஜலால் டீ சில்வா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்வில் சிறப்பு மலர்வெளியீடு, விருது வழங்கள், மற்றும் சிறப்பு கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

DSC 0299 resizedDSC 0380 resizedDSC 0387 resizedDSC 0403 resizedDSC 0439 resizedDSC 0590 resizedDSC 0618 resizedDSC 0735 resizedDSC 0752 resizedDSC 0812 resizedDSC 0676 resizedDSC 0679 resizedDSC 0697 resizedDSC 0776 resizedDSC 0051 resizedDSC 0034 resized