இலங்கைக்கான அவுஸ்திரேலிய நாட்டு உயர் ஸ்தானிகர் திரு.டேவிட் ஹொலி கடந்த 20.09.2019 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு வருகை தந்து இம்மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவுவது தொடர்பாக மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்கள் மற்றும் மாவட்ட செயலக உயரதிகாரிகள், மற்றும் சர்வதேச தொண்டார்வ நிறுவனங்களின் பிரதிநிதி களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
மாவட்ட செயலகத்துக்கு வருகை தந்த அவுஸ்திரேலிய நாட்டு உயர் ஸ்தானிகர் அவர்களுக்கு பாரம்பரிய கலாச்சார முறையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. அவுஸ்திரேலிய நாட்டு உயர் ஸ்தானிகருக்கு மாவட்ட அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில், மாவட்டத்தில் பல இன மக்களும் ஐக்கியமாக வாழ்வது பற்றியும், இங்குள்ள இயல்பு வாழ்க்கை மற்றும் மாவட்டத்தின் முக்கிய தேவைகள், இங்குள்ள வளங்களின் தன்மை மற்றும் இளைஞர்களின் தொழிலின்மை பிரச்சினைகள் பற்றியும் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்கள் விபரமாக எடுத்துரைத்தார்.
இதன் போது இம்மாவட்டத்தில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு நிறைய இயற்கை வளங்கள் இருப்பதால் இத்துறையின் வளர்ச்சிக்கு உதவுமாறும், நீண்டகாலமாக வெள்ள அனர்த்தங்களை சந்திக்கும் இம்மாவட்டத்துக்கு நிலையான வடிகான்கள் அமைக்கவும் உதவிகளை வழங்குமாறும் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்கள் உயர்ஸ்தானிகரை கேட்டுக்கொண்டார்.
அதன் பின்னர் தொழில் வழிகாட்டுதல் தொடர்பான இணையத்தளமொன்றும் இங்கு உயர்யஸ்தானிகரால் அங்குராப்பணம் செய்துவைக்கப்பட்டது. இதன் மூலம் சுற்றுலாத்துறை தொடர்பான தொழில்களையும் தொழில் பயிற்சிகளையும் தொழில் வாய்ப்பற்ற இளைஞர்களின் தொழிலின்மை பிரச்சினைக்கும் இலகுவான வழிகளை அடைய முடியுமென்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புன்னியமூர்த்தி காணிப்பிரிவின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்சனி முகுந்தன் அவுஸ்திரேலிய நாட்டின் உதவியில் அபிவிருத்திதிட்டங்களை அமுல்படுத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
















