
மட்டக்களப்பில் கடந்த 10 ஆண்டுகளாக மனிதாபிமான பணிகளை முன்னெடுத்து வரும் தொண்டு நிறுவனமான LIFT நிறுவனமானது 03.03.2025 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இரண்டு முறையான புலம்பெயர்வு பற்றிய விழிப்புணர்வு வீதி நாடகங்களை நடாத்தி, மக்களுக்காக கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்கள் மத்தியில் தெளிவை வழங்கியுள்ளது.
இந்த வீதிநாடகங்களில் முறையான புலம்பெயர்வின் முக்கியத்துவம், அதற்கான ஆலோசனைகளைப் பெறும் வழிமுறைகள் மற்றும் முறையற்ற புலம்பெயர்வின் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டமைந்திருந்தது. இந்த நிகழ்ச்சியில், கலையூற்று நாடகக் குழுவினர் நாடகங்களை நெறிப்படுத்தி, பார்வையாளர்களின் சந்தேகங்களை உரையாடல்களுடன் தீர்க்கும் வாய்ப்பினையும் வழங்கினார்கள். இவ்விழிப்புணர்வு நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி ) திருமதி.நவரூபரஞ்ஜினி முகுந்தன், உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஜீ. பிரணவன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், LIFT நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானு முரளிதரன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு, முக்கியமான விவாதங்கள் மற்றும் கருத்துக்கள் பரிமாற்றம் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சிகள் INTERNATIONAL CENTRE FOR MIGRATION POLICY DEVELOPMENT (ICMPD) நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் நடைபெற்றதாகவும், இவை மக்களுக்கு முக்கியமான தகவல்களை விளக்க உதவியதாக LIFT நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானு முரளிதரன் தெரிவித்தார்.








