
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளம் கிறிக்கட் வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு வருடாந்தம் இலங்கை கிறிக்கட் சபையின் அனுசரனையுடன் நடாத்தப்பட்டு வரும் கௌரவிப்பு விழா இம்முறை மட்டக்களப்பு மாவட்ட கிறிக்கட் சபையின் தலைவர் எந்திரி என்.டீ.ரஞ்சன் தலைமையில் மட்டக்களப்பு சிங்கிங் பிஸ் விடுதியில் 08.06.2025 அன்று மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
"கலர் நைட்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், கிறிக்கட் விளையாட்டில் சாதனை படைத்த விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு இதன் போது நினைவுச் சின்னங்களையும் பாடசாலை அணிகளுக்கான விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்சயன், இலங்கை கிறிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் பிரதிநிதிகள், கிழக்கு மாகாண கிறிக்கட் தெரிவுக் குழுவின் தலைவர் பிட்டிக்கல, மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வலித் லீலாரத்ன, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார, ஓய்வுநிலை கிழக்கு மாகாண சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்பரன் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் கண்கவர் அழகிய நடனங்கள், அதிதிகள் உரை என்பன இடம்பெற்று சாதனை படைத்த விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கான பரிசளிப்பும் கௌரவமும், பாடசாலைகள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கான சுமார் 80 இலட்சம் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









