மட்டக்களப்பில் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் "தொலஸ் மகே பாண" வேலைத்திட்டத்தின் கீழ் பாரம்பரிய உணவுக்கண்காட்சியானது பிரதேச செயலகங்களின் ஒத்துழைப்புடன் மாவட்ட செயலக முன்றலில் அமைக்கப்பட்டுள்ள வாகனத் தரிப்பிடத்தில் 23.10.2019 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது மட்டு நகரின் பாரம்பரிய உணவு உற்பத்திகளை ஊக்குவிக்கும் முகமாகவும் வெளிக்கொண்டுவரும் முகமாகவும் கலாச்சார நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு, எமது மாவட்டத்தில் வாழும் குடும்பங்களை தலைமை தாங்குகின்ற பெண்களை உள்ளடக்கியதாக காணப்பட்டது.

இக்கண்காட்சியின் மூலம் எமது மாவட்டத்தின் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் பண்பாட்டு அம்சங்களை வெளிக்கொண்டு வருவதனூடாக எமது அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்ல கூடியதாக இருக்கும் என்பதனையும் எமது பிரதேசம் பல்வேறு வளங்களுடன் அமையப்பெற்றிருப்பதனாலும் கடல் வளம், விவசாய வளம் அதிகளவில் காணப்படுவதனாலும் இவ்வளங்களைக்கொண்டு பாரம்பரிய உணவு உற்பத்திகளை அதிகரிக்க செய்வதனூடாக சுற்றுலாத்துறையையும் முன்னேற்றம் செய்யமுடியும் எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட பிரதம கணக்காளர் கே.ஜெகதீஸ்வரன், மாவட்ட விவசாய பணிப்பாளர் வை.பீ.இக்பால், பிரதேச செயலகங்களின் கலாச்சார உத்தியோகத்தர்கள், சிறுகைத்தொழில் உத்தியோகத்தர்கள், அரச உத்தியோகத்தர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.