அரசியலமைப்பின் 104(ஆ)(4)(அ) உறுப்புரைக்கமைய "தேர்தல் காலத்தின்போது அரசாங்கத்திற்கு அல்லது ஏதேனுமொரு பகிரங்க கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான ஏதேனும் அசையும் அல்லது அசையா ஆதனம்" யாதேனுமோர் அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழு எவரேனும் வேட்பாளரை ஊக்கப்படுத்துகின்ற அல்லது தடுக்கின்ற நோக்கத்துக்காக யாதேனுமோர் அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவினால் பயன்படுத்துவதைத் தடைசெய்வதற்கான தத்துவம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உண்டு.

அவ்வுறுப்பரையின் (ஆ) உப உறுப்புரையின் கீழ் தேர்தல் ஆணைக்குழுவினால் செய்யப்படும் பணிப்புரைகளை அமுல்படுத்துவதற்கு அரசிற்கு சொந்தமான ஆதனங்களை கட்டுக்காப்பில் வைத்திருக்கின்ற அலுவலர் ஒவ்வொருவரும் கடப்பாடுடையவராகின்றார். இக்காலப்பகுதியில் காணிக் கச்சேரிகளை நடாத்துதல், அவசரமாக ஒழுங்கு செய்யப்படும் அரசகாணிகள் பகிர்ந்தளிப்பு, அரச காணி உரித்து உறுதிகள் அல்லது வீட்டுரிமையை உரித்தளிக்கும் உறுதிகளை வழங்குதல், பெருந்தோட்டக் கைத்தொழில்களுக்கு அல்லது பயிர்செய்கை நடவடிக்கைகளுக்கான மானிய உதவிகள், உரம் விவசாய உபகரணங்கள் விளையாட்டு உபகரணங்கள் சுயதொழில் உபகரணங்கள், சைக்கிள்கள், சூரிய சக்தியால் இயங்கும் மின் விளங்குகள், வீடமைப்புக்கான கட்டிடப் பொருள்கள் முதலியவற்றைப் பகிர்ந்தளிக்கும் கருத்திட்டங்களும் வீடமைப்புக்கடன் வழங்குதல், இழப்பீட்டுத் தொகைகளை வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளும் இடைநிறுத்தப்படுதல் வேண்டும்.

இவ்வாறு வழங்கப்படுவதாக அரசாங்க அலுவலர்களினால் அறிவித்தல் விடுக்கப்பட்டு அதற்கான நிரல்கள் தயாரிக்கப்படுவதும் இக்காலப்பகுதியில் மேற்கொள்ளப்படலாகாது. இவ்வாறான கருமங்கள் மூலம் வாக்காளர்களுக்கு உபசரணை மேற்கொள்ளும் தவறு இழைக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் கிடைக்கப்பெறுவதாகவும் இவ்வாறான கருத்திட்டங்கள், நிகழ்ச்சித்திட்டங்களின் மூலம் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் ஊக்கப்படுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதே அதற்கான காரணமாகும்.

மேலும் வீடமைப்புக் கடனுதவிகள் வழங்குவதற்கான படிவங்களை விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகள் கருத்திட்டங்கள், நிகழ்ச்சித்திட்டங்களுக்கு ஏற்கனவே நாள் குறிக்கப்பட்டிருப்பின் அல்லது அவசர விசேட தேவையொன்று உருவாகுமாயின் அது தொடர்பாக எனக்கு அறியப் படுத்தல் வேண்டும் அதன்போது அது தொடர்பாக பொருத்தமான ஆலோசனைகள் வழங்கப்படும். அவ்வாறான கருத்திட்டங்கள் நிகழ்ச்சித்திட்டங்கள் ஆயினும் எந்தவோர் அரசியல் கட்சி சுயேச்சைக் குழுவின் வேட்பாளரொருவருக்கு விசேட அனுகூலமொன்று (அல்லது பங்கமொன்று) ஏற்படாத வகையில் அமுல்படுத்தப்படல் வேண்டும் என்பதையும் அதற்காக அலுவலர்கள் மாத்திரம் பங்குபற்ற வேண்டுமென்பதையும் கவனத்திற்கொள்ளல் வேண்டும்.

இத்தேர்தலுக்குரியதாக அரசாங்கத்தின் அல்லது அரச கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் அலுவலரொருவர் கடமை நேரத்தில் கடமை விடுமுறை (duty leave) பெற்றுக்கொண்டு யாதேனுமொரு கட்சிக்கு அல்லது குழுவுக்கு அல்லது வேட்பாளருக்கெதிராக செயலாற்றுவதில் ஈடுபடுவதற்கு வாய்ப்பளிக்கப்படலாகாது என்பதுடன் அவ்வாறு செயலாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.

அமைச்சுச் செயலாளர்கள் உள்ளிட்ட அரசியல் உரிமைகளை இழந்த அரசாங்கத்தின் பதவிநிலை அலுவலர்கள், கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகளின் பதவிநிலை அலுவலர்கள், பாதுகாப்புப் பிரிவுகளின் அங்கத்தவர்களும் தமது கடமை நேரங்களில் மட்டுமின்றி கடமைநேரத்திற்கு அப்பாலும் விடுமுறை நாட்களிலும் கூட மறைமுகமாகவோ நேரடியாகவோ எந்தவோர் அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழு அல்லது வேட்பாளரை ஊக்கப்படுத்தும் விதத்திலான அன்றேல் பங்கம் ஏற்படுத்தும் விதத்திலான செயற்பாடுகளில் பங்குபற்றுவதிலிருந்து அல்லது அவற்றிற்கு உடந்தையாகவிருப்பதிலிருந்து தவிர்த்திருத்தல் வேண்டும் அதாவது அரசியல் உரிமைகள் அற்ற அலுவலர்கள் அனைவருக்கும் அரசியல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி கிடையாததென்ற விதித்துரைப்பு மிகக் கடுமையாக செயல்வலுப்படுத்தப்படல் வேண்டும்.

அரசியல் உரிமைகளை இழந்த அரசாங்க அலுவலரொருவர் தனது தனிப்பட்ட சமூக வலையமைப்புக் கணக்கு அல்லது பிறிதொரு கணக்கைப் பயன்படுத்தி யாதேனும் அரசியல் கட்சியொன்றை அல்லது வேட்பாளரொருவரை ஊக்கப்படுத்துவதற்கோ பங்கம் ஏற்படுவதற்கோ காரணமாக அமையக்கூடிய பிரசாரம் எதனையும் அல்லது வெளிப்படுத்தல் எதனையும் செய்வது தவறாகும், அரசியல் உரிமைகள் கொண்ட அரசாங்க அலுவலராயிருப்பினும் கூட அரச வளத்தைப் பயன்படுத்தி அத்தகைய ஒரு பிரசாரத்தை மேற்கொள்வது தவறாகும்.

கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட சபைகளின் தலைவர்களும் பணிப்பாளர்களும் இத்தேர்தல் காலப்பகுதியில் எந்தவோர் அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழு அல்லது வேட்பாளரை ஊக்கப்படுத்துவதலிருந்து அல்லது பங்கம் ஏற்படும் விதமான செயற்பாடுகளில் ஈடுபடுவதிலிருந்து தவிர்த்திருத்தல் வேண்டும்.இவ்வாறு சகல அமைச்சுக்களுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய சுற்று நிருபத்திணை வெளியிட்டுள்ளார் இதன் அடிப்படையில் அரசாங்க ஸ்தாபனங்கள் செயல்படுதல் வேண்டும்.