தொடர்ச்சியாக பெய்துவருகின்ற அடைமழையினால் மட்டக்களப்பு மாவட்டத்திலே இதுவரை 6696 குடும்பங்களைச் சேர்ந்த 22614 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 06.12.2019 முதல் 8 இடைத்தங்கல் முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தெரிவித்தார்.

06.12.2019 அனர்த்த நிலைமைகளை ஆராயும் அவசர கலந்துரையாடல் அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ.எஸ்.வியாழேந்திரனுடன் இணைந்து நடாத்தப்பட்டது.

இக்கலந்துரையாடல் மூலமாக மாவட்டத்தில் எவ்வெவ் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்படுகின்ற மக்களை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளையும் இதற்கு ஏதுவான சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் இராணுவம், கடற்படை, பொலீஸ் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் போன்றோர் செயலாற்றி வருகின்றனர்.

05.12.2019 முதல் 2 முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் கிடைத்த அதிகமான மழைவீழ்ச்சி காரணமாக 8 முகாம்களில் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டு அங்கு மக்கள் அமர்த்தப்பட்டு அவர்களுக்கான அடிப்படை வசதிகள், சமைத்த உணவுகள், குடிநீர் என்பனவும் வழங்கப்பட்டு வருகின்றது.
கிரான் பாலத்தை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால் அங்கு மக்களின் போக்குவரத்துக்காக 5 இயந்திரப் படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. அப்பகுதியிலிருந்து கல்விபயிலும் பொதுச் சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் 2 மாணவர்கள் இவ் இயந்திரப்படகுகளுக்கூடாகவே தங்களின் பயணத்தை மேற்கொண்டு பரீட்சை எழுதிவருவது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று சித்தாண்டி, ஈரலக்குளம் வீதிகளுக்கும் இயந்திரப்படகுகள் மூலமே மக்கள் போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிலே 2 இடைத்தங்கல் முகாம்களும், மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவிலே 1  இடைத்தங்கல் முகாமும், போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிலே 1  இடைத்தங்கல் முகாமும், ஏறாவூர்பற்று செங்கலடி  பிரதேச செயலக பிரிவிலே 4 இடைத்தங்கல் முகாம்களும் அமைக்கப்பட்டு அம்மக்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தும் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.

மாவட்டத்தின் சகல பிரதேச சபைகளும், மாநகர சபை, நகர சபை ஆகியவை நீர்வடிந்தோடுகின்ற வடிகான்களை கவனமான முறையிலே இக்காலப்பகுதியில் துப்பரவு செய்து நீர் வழிந்தோடுவதற்கு ஏதுவான சுழலை ஏற்படுத்த வேண்டுமென மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ எஸ்.வியாழேந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.

DSC 0810 resized  DSC 0779 resized  DSC 0774 resized   DSC 0782 resized  DSC 0792 resized  DSC 0784 resized