மாதுறு ஒயா ஆறு பெருக்கெடுத்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திலுள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் முழ்கி இருப்பதுடன் முழ்கிய கிராமங்களில் சிக்குண்ட மக்களை அரசாங்க அதிபர் திரு. மாணிக்கம் உதயகுமார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கடற்படை மற்றும் இராணுவப்படையினரின் ஒத்துழைப்புடன் விசேட உலங்கு வானூர்தி மற்றும் இயந்திரப்படகுகள் மூலம் மீட்க்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இதன்படி ஏறாவூர்பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள கித்துள் கிராமத்தில் 30 பேரும் மாவடியோடை பகுதியில் 33 பேரும் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஆறு பெருக்கெடுத்ததையடுத்து பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் சகிதம் சென்ற அரச அதிபர் திரு. மாணிக்கம் உதயகுமார் அவர்கள் அனர்த்த நிலைமைகளை அவதானித்து உடனுக்குடன் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த அனர்த்தத்தில் மூழ்கிய கிராமங்களை சேர்ந்த மக்களை மீட்டெடுப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
படிமட்டியமடு மலையில் சிக்குண்ட மூவர் விமானப்படையின் ஹெலிக்கப்டரிலும் இன்னும் 60 பேர் கடற்படையின் இயந்திரப்படகுகள் மூலமும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதே நேரம் ஏறாவூர்ப்பற்றுப்பிரிவிலுள்ள வடிச்சல் கிராமம் ,தாமரைமடு ,மயிலவெட்டுவான் ,ஈரக்குளம் ஆகிய கிராமங்கள் இந்த வெள்ள அனர்த்தத்தில் நீரில் முழ்கியிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
இம்மாவட்டத்தில் மாதுறு ஒயா பெருக்கெடுத்த அனர்த்தத்தில் முறுக்கந்தீவு, பிரம்படித்தீவு, சாராவெளி, பொண்டுகல் சேனை, புலாக்காடு, அக்குறானை ,முறுத்தானை, கல்லடிவெட்டை, கானாந்தன்னை, வடமுனை, உத்துச்சேனை கொக்குஞ்சுமடு , சோதயன்கட்டு , வண்ணாத்தியாறு காத்தான்டவாடி , ஆட்டுகாலை , கித்துள் , உட்பட பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந்த அனர்த்ததால் 169 குடும்பங்களை சார்ந்த 495 பேர் இடம்பெயர்ந்து அரசாங்க அதிபரின் உத்தரவில் நான்கு நலன்புரிநிலையங்களில் தங்க வைத்து சமைத்த உணவு வழங்கப்பட்டு; பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.






