கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்து வருகின்ற பார்வையற்ற மற்றும் பார்வை குறைபாடுடையவர்களின் நலன் கருதிசெயற்படும் மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு நிதி சேர்க்கும் முகமாக வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் கொடிவாரம் 17.02.2020 ஆரம்பமாகி எதிர்வரும் 28.02.2020 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவிருக்கின்றது.
இந்த கொடி வாரத்தை முன்னிட்டு முதலாவது கொடியினை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களுக்கு மாவட்ட செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக இச் சங்க உறுப்பினர்களால் அணிவித்து கொடி விற்பனை ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது கொடியினை உதவி மாவட்டச்செயலாளர் திரு.ஏ.நவேஸ்வரன் அவர்களும், மூன்றாவது கொடியினை மாவட்ட சமூக சேவை உத்தியோகஸ்தர் திருமதி.சந்திரகலா குகனேஸ்வரன், உதவி மாவட்ட செயலாளர் பணிமனை சிரேஸ்ட முகாமைத்தவ உத்தியோகஸ்த்தர் ஏ.மொகமட் றிழாவிற்கும் இக் கொடி அணிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மண்முனை வடக்கு பிரதேசசெயலகம், மட்டக்களப்பு மாநகர சபை உட்பட நகரிலுள்ள அரச செயலகங்களிலும் விழிப்புலனற்றோர் கொடி விற்பனையில் ஈடுபட்டனர். இந்த கொடி வார நிகழ்வுகள் இம் மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. இம் மாகாணத்தில் வாழ்ந்துவரும் பார்வையற்ற, பார்வை குறைபாடுடையவர்களின் வாழ்வாதாரம், வளர்ந்தோர் கல்வி, கலை, மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் மேம்படுத்தி சமூகத்தில் கௌரவமாக வாழ்வதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.
இது தொடர்பாக உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் நிருவாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இக் கொடிவாரத்தினை அனுஸ்டிப்பதன் நோக்கம் கிழக்கு மாகாணத்தில் வசித்து வருகின்ற பார்வையற்றவர்களை இனங்கண்டு எமது சங்கத்தில் இணைத்துக் கொள்ளுதல், பார்வையற்றவர்கள் தொடர்பாக சமூகம் கொண்டுள்ள அனுதாப நிலையினை இல்லாது ஒழித்தல், அங்கத்தவர்களின் நலன் கருதி கணினி பயிற்சி நெறி, பிறேயில் எழுத்தப்பயிற்சிநெறி, அங்கத்தவர்களின் குழந்தைகளின் கல்வியினை விருத்தி செய்தல், இத்துடன் பல்கலைக்கழக மாணவர்கள் கல்வியினை தொடர்வதற்கு உதவிகளை வழங்குதல், பார்வையற்றுள்ள கலைஞர்களை ஊக்குவித்தல், சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குதல், போன்ற உரிய நோக்கங்கள் கருதியே என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நல்ல செயற்பாடுகளுக்கு பூரண ஆதரவு வழங்கி பார்வையற்றவர்களின் வாழ்வு சிறப்பாக அமைவதற்கு பங்குதாரர்களாக தம்முடன் இணையும் பொருட்டு நமது சங்கத்தின் கொடி விற்பனைக்கு ஆதரவு வழங்குமாறு பொதுமக்கள், கல்விமான்கள் மற்றும் கொடையாளர்களை வேண்டிக் கொள்வதாக தெரிவிக்கின்றனர்.













