
கொடிய கொரோனா வைரசினை மட்டக்களப்பில் இருந்து நீக்குவது தொடர்பான உயர்மட்டக் கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 17.03.2020 அன்று இடம் பெற்றது.
கொரோனா நோய்த் தொற்று தொடர்பாக ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் உள்ளவர்கள் பற்றியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள், வெளிப்பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள் போன்ற விபரங்கள் பிரதேச செயலகம் வாயிலாக தினமும் மாவட்ட செயலகத்திற்கு வழங்கவேண்டும் எனவும், கடந்த பெப்ரவரி மாதத்திற்குப் பின்னர் எந்தவொரு வெளிநாட்டில் இருந்து வந்தவர்களாயினும் அவர்களை கிராம சேவையாளர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்களின் உதவியுடன் இனங்கண்டு பொலிஸ் திணைக்களத்தின் உதவியையும் கொண்டு வைத்தியப் பரிசோதனைகளின் பின்னரே தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் எனவும், இது தொடர்பில் பிரதேச செயலாளர்கள் அதிமுக்கிய கவனஞ் செலுத்த வேண்டும் என அரசாங்க அதிபரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கொரோனா வைரஸ் தாக்கத்தை முற்றாக தடுப்பது தொடர்பாக மாவட்ட செயலணி ஒன்று தாபிக்கப்பட்டு அதனூடாக பல முக்கிய முன்னெடுப்புக்களை மேற்கொண்டு இம்மாவட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இச் செயலணி மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி சு. ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி. கலாரஞ்சனி கணேசலிங்கம், மட்டக்களப்பு அரச வைத்தியர்கள் சங்கத் தலைவர் வைத்திய நிபுணர் டாக்டர் சுந்தரேசன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமணை அத்தியட்சகர், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர், உள்ளுராட்சி உதவி ஆணையாளர், பொலிஸ் திணைக்களம் சார்பாக ஒருவரும், முப்படை சார்பாக ஒருவரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இதில் மட்டக்களப்பு வர்த்தக சங்கம் சார்பில் ஒருவரும், மதகுருமார்கள் சார்பில் ஒருவரும் இணைத்துக் கொள்ளப்படவேண்டும் என்ற வேண்டுகோளுக்கிணங்க இவ்விரு அமைப்புக்கள் சார்பாகவும் இருவர் மாவட்ட செயலணிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது கொரோனா நோயாளர் இணங்காணப்பட்டுள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்களா என்ற சந்தேகத்தில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நால்வரில் இருவருக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் மற்றுமொருவரின் இரத்த மாதிரி கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு முடிவுகளை எதிர்பார்த்திருக்கும் வேளையில் நான்காவது நபர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார் என வைத்தியப் பரிசோதனை அறிக்கை தெரிவிக்கின்றது. குறித்த நபர் மட்டக்களப்பு வடக்கு பிரதேச செயலகப் பிரிவினைச் சேர்ந்தவர் எனவும், கடந்த மூன்று தினங்களுக்கு முன் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வந்தவர் எனவும் இவர் மட்டக்களப்பின் பல வர்த்தக நிறுவணங்கள், பொது இடங்கள், வங்கிகளின் தானியங்கி பணமெடுக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தியுள்ளதாகவும் மட்டக்களப்பு பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். தற்பொழுது இந்நோயாளி மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு ஐ.டீ.எச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தற்பொழுது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா நோய்ச் சிகிச்சை விசேட பிரிவில் தனிமைப் படுத்தப்பட்ட 6 கட்டில்கள் விசேடமாகவும், மேலும் 54 கட்டில்கள் அடங்களாக 60 கட்டில்கள் கொண்ட விடுதி தயார் நிலையில் உள்ளது என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார். மேலும் இன்று கிடைக்கப்பெற்ற விசேட அறிவறுத்தல்களுக்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தளவைத்தியசாலைகளும் இதற்காக தயார்படுத்தப்படுவதாகவும் இதில் வாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி தள வைத்தியசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்நோய்த் தொற்றினைத் தடுப்பதற்காக, உலகின் எப்பாகத்தில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் இருந்தாலும் அவர்களை தனிமைப்படுத்தல் செயற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் எனவும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் வாயிலாக பிரதேச செயலாளர்கள் அதீத கவனம் எடுக்கவேண்டும் என அரசாங்க அதிபரினால் அறிவுறுத்தப்பட்டது.
மட்டக்களப்பு நகர் பிரதேசத்தில் உள்ள தனியார் வகுப்புகள், கல்வி நிலையங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட வேண்டும் எனவும், பொது நூலகங்கள், சிறுவர் பூங்காக்கள் உட்பட பொழுது போக்கு இடங்களும் மூடப்படுவதுடன் பொதுச் சந்தைக்கு வரும் மக்கள் தொற்று ஏற்படாமல் இருக்கத்தக்கவாறு நடவடிக்கை மேற் கொள்ளப்பட வேண்டுமென மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
மக்கள் பயணிக்கும் பொதுப்போக்குவரத்துக்களான இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் தினமும் தொற்று நீக்குவதற்கான தொற்று நீக்கி தெளிக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு பஸ் நிலைய பொறுப்பதிகாரியிடமும், தனியார் பஸ் வண்டிகள் அதன் உரிமையாளர்களின் பங்களிப்புடன் தொற்று நீக்கு செயற்பாடு மேற்கொள்ள வேண்டும் எனவும், பஸ்வண்டிகளில் காணப்படும் குளிரூட்டிகளை தற்காலிகமாக நிறுத்துமாறும், அதில் காணப்படும் ஜன்னல் திரைகளை உடன் அகற்றுமாறும் அரசாங்க அதிபர் உத்தரவிட்டார். மேலும் முச்சக்கர வண்டி சாரதிகள் உள்ளுர் போக்குவரத்து சேவைகளை மேற்கொள்பவர்கள் ஆகையால் ஒவ்வொரு பயனிகளையும் ஏற்றி இறக்கியபின் தொற்று நீக்கும் செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதற்கான தொற்று நீக்கி சாதனமாக சந்தையில் காணப்படும் துணிகழுவும் குளோரக்ஸ் பயன்படுத்தமுடியும் எனவும் வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்னும் சுற்றுலா விடுதிகளின் உரிமையாளர்கள் தமது விடுதிகளில் தங்கி இருப்பவர்கள் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதுடன், வாடிவீடுகள், கோட்டல்கள் அமைந்துள்ள பிரதேச செயலகங்கள், கிராம சேவைப்பிரிவுகளுடாக அவதானத்துடன் செயற்படவேண்டும் எனவும், இந்த நோய்தடுப்பு செயற்பாட்டிற்கு பொலிஸ் திணைக்களம் சகல ஒத்துளைப்புக்களை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.மேலும் மத தலைவர்கள் தமது மத ஸ்தலங்களில் காணப்படும் ஒலிபெருக்கி மூலம் சமய விடயங்களுக்கூடாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள், விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
தனியார் மருத்துவமனைகள் எவ்வாறு செயற்படவேண்டும் என்ற அறிவுறுத்தல்களை பிராந்திய சுகாதார அத்தியட்சகர் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதுடன் கூட்டுறவுச் சங்கங்கள் வர்த்தக நிலையங்கள் மக்களுக்குத் தேவையான அத்தியவசியப் பொருட்கள் இம்மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு ஏற்றவகையில் இருப்புக்களை வைத்துக்கொள்ளவேண்டும் என்றும், எரிபொருட் தட்டுப்பாடு ஏற்படாதவகையில் எரிபொருள் கூட்டுத்தாபனம் எரிபொருள் களஞ்சியப்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசாங்க அதிபர் ஆலோசனை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுற்றாடல் அதிகார சபை உதவிப் பணிப்பாளர், உள்ளுராட்சி உதவி ஆணையாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி, முப்படையினர், சகல திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், மதகுருமார்கள், அரச தனியார் போக்குவரத்து சபை பிரதிநிதிகள், முச்சக்கர வண்டி சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.







