
கோவிட் 19 கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் அமுல்படுத்திவரும் ஊரடங்கு சட்டத்தினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளாந்த கூலிவேலைதொழிலாளருக்கு உலருணவுகளை அன்பளிப்புச்செய்ய தொடர்ந்தும் பல தொண்டார்வ அமைப்புக்களும் பொதுநல சங்கங்களும் முன்வந்துள்ளன.
இந்தவகையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வேண்டுகோளின் பேரில் லண்டனில் செயல்படும் மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கத்தின் மட்டக்களப்பு கிளை சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான உலருணவு பொருட்களை அன்பளிப்பு செய்துள்ளது.
சுமார் 300 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க அரிசி, சீனி, மா, பருப்பு அடங்கலான உலருணவு பொதிகளை லண்டனில் செயல்படும் மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கத்தின் மட்டக்களப்பு கிளை பிரதிநிதிகள் 06.04.2020 அன்று மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்த அன்பளிப்பு உலருணவுப்பொதிகள் மண்முனை பற்று ஆரையம்பதி, கோறளைப்பற்று தெற்கு கிரான் ஆகிய இரு பிரதேச செயலகப்பிரிவுகளில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நாளாந்த கூலிவேலை தொழிலாளர்களுக்கு வழங்குமாறு இரு பிரிவின் பிரதேச செயலாளர்களுக்கும் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்கள் ஏற்பாடு செய்துள்ளதாக மாவட்ட செயலக அரச ஊடகப்பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.
இந்த அன்பளிப்பு உலருணவுப்பொதிகள் கையளிக்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், உதவி மாவடட செயலாளர் திரு ஏ.நவேஸ்வரன், லண்டனில் செயல்படும் மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் கணக்காளர் திரு பெ.முத்துலிங்கம், உபதலைவர் ஓய்வுநிலை வலயக் கல்விப்பணிப்பாளர் திரு கே.சத்தியநாதன், உபசெயலாளர் திரு கே.சசிதரன் ,கணக்காய்வாளர் என்.ஜெபராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.






