
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வதியும் சமூர்த்தி உதவியைப்பெற விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலிலுள்ள சுமார் 3347 குடும்பங்களுக்கும், 263 வயோதிபர் ஊதியம் பெறவும், 314 அங்கவீனர் கொடுப்பனவு பெறவும், 31 கிட்னி நோயாளர்கள் நிதி பெறவும் காத்திருப்போர் பட்டியலிலுள்ளவர்களுக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன் தலைமையிலான உத்தியோகத்தர் குழு 09.04.2020 அன்று நேரடியாக அரசின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலில் அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கியுள்ளது.
இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா கருத்துத் தெரிவிக்கையில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய கடந்த வாரம் சமுர்த்தி உதவி பெறுபவர்கள், முதியோர் கொடுப்பனவு பெறுபவர்கள், புற்றுநோய் சிறுநீரக நோய் போன்ற விசேட நோய்க் கொடுப்பனவுகள் பெற்று வந்த அனைவருக்கும் தலா 5000 ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதனால் தொழிலை மேற்கொள்ள முடியாமல் வாழ்வாதாரத்தினை இழந்துள்ள சுமார் 17000 குடும்பங்களுக்கும் இந்த 5000 ரூபா கொடுப்பனவு அடுத்த வாரத்தில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.





