
நாட்டில் உணவுப்பஞ்சம் ஏற்படாதிருக்க முன்கூட்டியே அரசாங்கம் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் முன்னெடுக்கும் சௌபாக்கியா உணவு பாதுகாப்பு திட்டத்தில் விவசாய உற்பத்திகளுக்கு தற்பொழுது முன்னுரிமை வழங்கப்பட்டு விசேட திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது.
இந்த நடவடிக்கைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டுதலில் மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தற்போது மரக்கறி மற்றும் பழமர செய்கைக்கு கூடிய கவனம் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த விசேட திட்டத்தில் மரக்கறி மற்றும் பழமர செய்கைக்கு ஆர்வம் காட்டும் குடும்பங்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் மற்றும் விதைகளை பெற் றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மாவட்டசெயலகத்தின் அரச ஊடகப்பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.
இதற்கமைய 10.04.2020 அன்று மாவட்ட செயலக வளவில் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் முதல்கட்ட நடுகை செய்வதற்காக மட்டக்களப்பு எகெட் கரித் தாஸ் தொண்டார்வ நிறுவனத்தின் அனுசரணையில் சுமார் 1000 இலவச மரக்கறி மரக்கன்றுகள் மற்றும் விதைபொதிகள் பிரதேச செயலாளர்களிடம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் வழங்கி வைத்தார்.
இதன்போது எஹெட் கரித்தாஸ் நிறுவன பணிப்பாளர் அருட்தந்தை ஏ.ஏ. அலெக்ஸ் ரொபர்ட் அடிகள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணிய மூர்த்தி,உள்ளக கணக்காய்வாளர் திருமதி இந்திரா மோகன்,பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டனர். இந்த விசேடதிட்டத்தில் செய்கை பண்ணப்படும் உற்பத்திகளை விவசாய திணைக்கள உத்தியோகத்தர் குழு கட்டம் கட்டமாக மேற்பார்வை செய்யவுள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் மாவட்ட செயலகத்தின் அரச ஊடகப் பிரிவுக்கு தெரிவித்தார்.






