
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக விவசாயிகலான பட்டிப்பளை பிரதேச புளுக்குணாவி குளத்து நீரை நம்பி விசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கடந்த மாதம் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களிடம் முறையிட்டதையடுத்து அரசாங்க அதிபரின் தீவிர முயற்சியினால் அயல் மாவட்டமான அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் உரையாடியதைத் தொடர்ந்து களுகல் ஓயா சமுத்திரத்தில் இருந்து நீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வெள்ளிக்கிழமை நவகிரி குளத்தில் இருந்து தற்போது புளுக்குணாவி குளத்திற்கு வந்த நீர் விவசாயிகளின் விளை நிலங்களுக்கு திறக்கப்பட்டுள்ளதாக பட்டிப்பளை பிரதேச பொறியலாளர் திரு.சதாசிவம் சுபாகரன் அரசாங்க தகவல் திணைக்கள மாவட்ட ஊடக பிரிவிற்கு தெரிவித்தார்.
வரலாற்றில் பிற மாவட்டத்தில் இருந்து நீர் பெற்றுக்கொடுத்தமை என்பது இதுதான் முதல் தடவை என்றும் இது முழுக்க முழுக்க அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் அயராத முயற்சி என்றும் பொறியலாளர் சதாசிவம் சுபாகரன் பாராட்டுத் தெரிவித்தார். புளுக்குணாவி குளத்து நீரை நம்பி விசாயம் செய்கை பண்ணப்பட வேண்டிய 2980 ஏக்கருக்கான அனுமதி மாத்திரம் வழங்கப்பட்ட நிலையில் அதற்கு மேலதிகமாக 500 ஏக்கர்களை செய்கை பண்ணப்பட்டதினால் குளத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர் போதுமானதாக இல்லாத காரணத்தினால் மாவட்டத்தில் உள்ள நவகிரி குளத்துநீரை பாவிப்பது தொடர்பாக மத்திய நீர்ப்பாசன திணைக்களத்துடன் உரையாடிய போது பிரதிப்பணிப்பாளர் திரு.எம்.வி.எம்.அசார் நவகிரி கன்ட விவசாயிகளுக்கு போதுமான நீர் மாத்திரம் தங்களிடம் உள்ளதினால் புளுக்குணாவி விவசாயிகளுக்கு வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்ததைத் தொடர்ந்து மாற்று வழி ஒன்று தேவைப்பட்டது.
அதன் அடிப்படையில் அயல் மாவட்டமான அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருடன் உரையாடலை மேற்கொண்ட மட்டக்களப்பு அரசாங்க அதிபர் தொடந்து நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன் மத்திய மாகாண பணிப்பாளர்களுடனும் உரையாடி விவசாயிகளின் விளைநிலங்களை அழிந்து போகாது பாதுகாத்துள்ளமையை விவசாய பொதுமக்களும் பாரட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று முதலைமடுக்கன்டம், வாழைக்காலை, மாவடியுன்மாறி, ஆலையடியுன்மாரி ஆகிய கன்டங்களுக்கு களுகல்ஓயாவில் இருந்து 1500 ஏக்கர் அடிநீர் நவகிரிக்கு அனுப்பப்பட்டு தற்போது புளுக்குணாவி குளத்தில் இருந்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. உணவு உற்பத்தியினை பாதுகாத்தல், உணவு உற்பத்தியினை ஊக்கப்படுத்துதல் எனும் அடிப்படையில் முயற்சி எடுத்த அம்பாறை மட்டக்களப்பு அரசாங்க அதிபர்கள், மத்திய மாகாண நீர்ப்பாசண திணைக்கள பணிப்பாளர்கள், மத்திய நீர்ப்பாசண திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பிரதேச செயலாளர்கள், பொறியலாளர்கள், நலன்விரும்பிகள், பொதுமக்கள் ஆகியோரும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என பொறியலாளர் திரு. சதாசிவம் சுபாகரன் தெரிவித்தார்.







