
கரவாகுப்பற்று நற்பிட்டிமுனை மற்றும் கிட்டங்கி நாவிதன்வெளி விவசாயிகளின் தாழ்நில விவசாய காணிகள் முழுமையாக வெள்ளத்தினால் கிட்டத்தட்ட (5000) ஐயாயிரம் எக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக முறையிட்டனர் இது தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் பேசியதன் அடிப்படையில் 27.05.2020 அன்று ஆற்றுவாய் வெட்ட, தீர்மானிக்கும் மாவட்ட செயலணி அவசரமாக கூட்டி தீர்மானம் எடுக்க வேண்டிய தேவையின் அடிப்படையில் கூட்டமானது மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இவ்வாறானதொரு செயற்பாடு கடந்த 2018ம் ஆண்டு இடம்பெற்று எமது மாவட்டம் கடும் வரட்சியை எதிர்கொண்டு குடிநீர் முழுமையாக மக்களுக்கு வழங்கமுடியாத நிலை ஒன்று எற்பட்டது சுட்டிக்காட்டப்பட்டது. நீர் வடிந்தோடுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாக காணப்படுவதாக துறைசார் திணைக்களத் தலைவர்கள் இங்கு குறிப்பிட்டிருந்தனர். இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியலாளர் திருமதி வண்ணியசிங்கம் கலைவாணி குறிப்பிடுகையில் சாதாரணமாக 112 மில்லி மிற்றர் நீர் நிரம்பியதன் பின்னர்தான் வெட்டுவது தொடர்பில் ஆராயப்படும், தற்போது 40 மில்லி மிற்றர் இருப்பதனால் அவசியம் இல்லை என குறிப்பிட்டார். மேலும் 9 பிரதேச பிரிவுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றதாக அனர்த்த முகாமைத்துவ நிலை உதவிப் பணிப்பாளர் திரு.ஏ.சி.எம் சியாத் குறிப்பிட்டார்
இக்கூட்டத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் முகத்துவாரம் ஆற்றுவாய் வெட்டவேண்டிய தேவைப்பாடு எமது மாவட்டத்திற்கு இல்லை என்றும், வெட்டுவதால் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், வாவி மீனவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள் என்பதாலும் எதிர் காலத்தில் நிலத்தடி நீர் இல்லாமல் ஆகலாம் என்பதாலும் ஆற்றுவாய் வெட்டிவிடுவது சாத்தியமில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் மற்றும் மத்திய நீர்பாசன திணைக்களப் பணிப்பாளர் திரு. எஸ்.எம்.பி.அசார் மாகாண நீர்பாசன திணைக்களப் பணிப்பாளர் திரு. எஸ்.இராஜகோபாலசிங்கம், கமநல திணைக்கள உதவி ஆணையாளர் திரு. கே.ஜெகநாத் மற்றும் மாநகர உதவி ஆணையாளர் திரு. உ.சிவராஜா மீன் பிடித்திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள், மீனவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.







