
மட்டக்களப்பில் ஆடைக் கைத்தொழில் பூங்கா அமைப்பதற்காக செங்கலடி புண்ணக்குடா பகுதியில் 200 ஏக்கர் காணி இலங்கை முதலீட்டாளர் சபைக்கு கையளிக்கும் நிகழ்வு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு கே. கருணாகரன் அவர்களின் தலைமையில் பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் பங்குபற்றுதலுடன் 09.02.2021 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இலங்கை முதலீட்டாளர் சபையின் வேண்டுகோளின் போரில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் இனங்காணப்பட்ட 200 ஏக்கர் காணிகளும் அளவை செய்யப்பட்டு ஆடைக் கைத்தொழில் பூங்கா அமைப்பதற்காக முதலீட்டார் சபைக்கு கையளிக்கப்பட்டது. இதனூடாக வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நான்கு ஆடைக் கைத்தொழில் நிறுவனங்கள் இங்கு அமைக்கப்படவிருப்பதுடன் இம்மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் இளைஞர் யுவதிகள் நேரடியாக வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளவிருக்கின்றனர். மற்றும் இது போன்று மும்மடங்கு மறைமுகமான தொழில் வாய்ப்புக்கள் இம்மாவட்ட மக்களுக்கு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இக்காணி கையளிக்கும் நிகழ்வில் காணிப்பிரிவிற்கான மேலதி அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன், காணி சீர்திருத்த ஆணைக்குழு மட்டக்களப்பு திருகோண மலை மாவட்டங்களுக்கான பணிப்பாளர் என். விமல்ராஜ், இலங்கை முதலீட்டாளர் சபையின் பிரதிப் பணிப்பாளர் எஸ். சட்குணலிங்கம், காணி சீர்திருத்த ஆணைக்குழு கிளை நிருவாகப் பொறுப்பாளர் எஸ். சுரேந்தர் உட்பட கிளை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.







