
நாட்டைக் கட்டியெழுப்பின் சுபீட்சத்தின் நோக்கு எனும் அரசின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக பட்டதாரி மற்றும் டிப்ளோமாதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டமாக கடந்த ஒரு வருட காலமாக பட்டதாரிப் பயிலுனர்களாக பயிற்சிகளை மேற்கொண்டவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு 09.04.2021 அன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு கே.கருணாகரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், நியமனதாரிகளுக்கான நியமனங்களையும் வழங்கிவைத்தார். பொது நிருவாக அமைச்சின் இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் 201 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் இவர்களை மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலக பிரிவுகளின் ஆளணி தேவையின் நிமிர்த்தம் நியமனங்கள் வழங்கப்பட்டு எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த கடமை நிலையங்களில் கடமைப்பொறுப்பினை ஏற்கவுள்ளனர்.இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, மட்டக்களப்பு மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி.இ.மோகன், மாவட்ட செயலக கணக்காளர் திரு எம்.வினோத் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டு நியமனதாரிகளுக்கான நியமனங்களை வழங்கிவைத்தனர்.








