மட்டக்களப்பு மாவட்டத்தில் "கிராமத்துடன் கலந்துரையாடல்" கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக அமுல்படுத்தப்பட்டுவரும் மேலும் அமுல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 06/03/2022 அன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு. கே.கருணாகரன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலகமாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின்போது மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும்போது எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் அதற்கான தீர்வுகளும் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள்சார் உயரதிகாரிகளினால் முன்வைக்கபட்டுள்ளது.
தற்போது நாட்டில் எற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலும் இந்த அபிவிருத்தி திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் எந்தவகையிலும் பாதிப்பு ஏற்படாது என்று கூறப்பட்டதுடன், ஜனாதிபதியின் எண்ண கருவின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற "பசுமை புரட்சி" திட்டம் தொடர்பாக பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் தெளிவூட்டப்பட்டிருந்தனர்.
அத்தோடு கிராமத்திற்கு ஒரு கடை தொடர்பான திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், இத்திட்டத்திற்காக ஒரு கடைக்கு 12 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் திரு.ஏ. நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திருமதி. இந்திராவதி மோகன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள், விவசாய, மீன் பிடி, கல்வி ஆகிய திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலக திட்டமிடல் அதிகாரிகள் உள்ளிட்ட ஏனைய துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகளும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.









