
மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கருணாகரன் அவர்கள் தலைமையில் தொழுநோய் தடுப்பு இயக்கம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலமர்வு மண்டபத்தில் 27.04.2022 ஆம் திகதி இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந் நிலையில் ஐனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் 50 நோயாளிகள் இந்நோய் தாக்கத்துக்கு இலக்காகியுள்ளனர். தொழுநோயினால் பாதுகாப்புக்குள்ளான சுகாதார வைத்திய பிரிவுகளாக ஆரையம்பதி,ஏறாவூர்,செங்கலடி போன்ற பகுதிகளில் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
தேசிய ரீதியாக கணிக்கும் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இத்தொற்றுநோயானது முதலாவது இடத்தில் காணப்படுகிறது. தொழுநோயானது சுவாச தொற்றின் மூலம் பரவும் ஒரு தொற்று நோயாகும். இத் தொற்றினால் பாதிக்கப்பட்டவரை இனங்காண்பதற்கு பல வருடங்கள் தேவைபடுகிறது. பொதுவாக தொழுநோய் அடையாளங்களாக தோலில் உணர்வு அற்ற வெந்நிற படலங்கள், சிறு கட்டிகள் காணப்படுகிறது.
இந்நோயின் ஆரம்ப அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக தோல் வைத்திய நிபுணரை அணுகி உடனடியாக சிகிச்சையை 6 மாதம் முதல் 1 வருடத்தினுள் பெறுவதன் மூலம் 100 சதவீத பூரண சுகமடையலாம் என இந்நிகழ்வில் சுகாதார அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
1983க்கு முற்பட்ட காலகட்டத்தில் இந் நோய்க்கான மருத்துவ வசதிகள் காணப்படவில்லை. தற்போதைய காலகட்டத்தில் சர்வதேச தரத்திலான மருந்துகள் உலக சுகாதார ஸ்தாபனம் மூலம் நோயாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
எமது மாவட்டத்தில் இந் நோய் தொடர்பான விழிப்புணர்வு இன்மையால் சிறுவர் முதல் பெரியவர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான சிகிச்சை பெறுவதன் மூலம் தம்மையும் தமது சமூகத்தையும் பாதுகாக்க வேண்டியது அவர்கள் கடமையாகும்.
இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி சிறிகாந் , உதவி மாவட்ட செயலாளர் திரு.ஏ.நவேஸ்வரன் , வைத்தியர் குணராஐசேகரம் , வைத்தியர் டான் , பொது சுகாதார பரிசோதகர் திரு.வேணிதரன் மற்றும் காவேரி கலா மன்றம்,அலைன்ஸ் டெவலோப்மன்ட் ட்ரஸ்ட் ஆகிய அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.








