DSC 0019 1 resized

மட்டக்களப்பில் கொய்க்கா திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் இயற்கை விவசாய செயற்திட்டம் வெற்றியளித்துள்ளது. கொரியநாட்டின் அனுசரணையுடன் இயற்கை முறையில் விவசாய உற்பத்திகளை மேற்கொள்ளும் திட்டம் மட்டக்களப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஏப்ரல் மாதம் இறுதிவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தினை மேலும் 18 மாதங்களுக்கு மீள நீடித்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே. கருணாகரன் அவர்கள்  தலைமையில் 27.04.2022 மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது  கொய்க்கா திட்டத்தின்கீழான  இயற்கை விவசாயத்திட்டம் இம்மாவட்டத்தில் பெரும் வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வாகரை, வழைச்சேனை, கிரான் மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏழை விவசாயிகள் இத்திட்டத்தினூடாக இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தனர். இவ்விவசாயிகளுக்கு இயற்கை முறையில் பயிர்கள் செய்கை பண்ணுவதற்குத் தேவையான ஆலோசனைகள், வழிகாட்டல்கள் விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்டது. மேலும் இவற்றுக்கான உள்ளீடுகள் மற்றும் உபகரணங்கள் கொய்க்கா திட்டத்தினூடாக வழங்கப்பட்டிருந்தன.

கொரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் இயற்கை விவசாய நடைமுறைகள் இத்திட்டத்தில் பயிற்சியளிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இதன் அறுவடைகளை விவசாயிகள் தமது தேவைக்காக பயன்படுத்துவதுடன் சந்தைப்படுத்துவதற்காக மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கருகாமையில் விசேட சந்தை வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. இதனூடாக வாரத்தில் இரண்டு நாட்கள் நஞ்சற்ற இயற்கை முறையிலாக  உற்பத்தி செய்யப்பட்ட தமது விவசாய அறுவடைகளை சந்தைப்படுத்தி வெற்றிகண்டுள்ளனர்.

இக்கலந்துரையாடலின்போது இத்திட்டத்தினை மேலும் 18 மாதங்கள் நீடிப்பதற்கு கொய்காக நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. இத்திட்டமானது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைவான இயற்கை விவசாயத்திட்டத்திற்கு பாரிய பங்களிப்பு வழங்குகின்றமை சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வின்போது கொய்க்கா திட்டத்தின் இலங்கை நாட்டிற்கான உத்தியோகத்தர் லீ, மற்றும் அவரது உத்தியோகத்தரான ஹீசிஓங், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி .சசிகலா புண்ணியமூர்த்தி, வேல்விசன் நிறுவனத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் சிரோன் பெரேரா, இயற்கை விவசாய திட்டமுகாமையாளர் ஜெகதீஸ்வரி குனசிங்கம், திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பிரதேசங்களின் பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

DSC 0023 1 resized DSC 0025 resized DSC 0019 1 resized