மட்டக்களப்பு - விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது 52 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு "விளாவூர் யுத்தம்" எனும் தொனிப்பொருளில் நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் மகிழடித்தீவு மகிழை இளைஞர் விளையாட்டு கழகம் சம்பியனாக மகுடம் சூடியுள்ளது.
37 ஆணிகளின் பங்குபற்றலுடன் கடந்த 06 ஆம் திகதி விளாவட்டவான் ராஜா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகிய விலகல் முறையிலான குறித்த உதைபந்தாட்ட சுற்று போட்டியின் இறுதி நிகழ்வு 08.05.2022 அன்று ராஜா விளையாட்டுக்கழக தலைவர் திரு.சி.கேதீஸ்ரன் தலைமையில் இடம்பெற்றது.
08.05.2022 அன்று பிற்பகல் இடம்பெற்ற அரையிறுதிச் சுற்றின் முதலாவது போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா அணியும், குருந்தையடிமுன்மாரி ரென்ஸ்டார் அணியும் மோதியிருந்தனர். குறித்த போட்டியில் தண்ட உதை மூலம் முனைக்காடு இராமகிருஸ்ணா அணி வெற்றிபெற்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.
தொடர்ந்து இடம்பெற்ற அரையிறுதிச் சுற்றின் இரண்டாவது போட்டியில் முகத்துவாரம் லைற்ஹவுஸ் அணியும், மகிழடித்தீவு மகிழை இளைஞர் அணியும் பலப்பரிச்சை நடத்தியிருந்தனர். இதில் தண்ட உதை மூலம் மகிழடித்தீவு மகிழை இளைஞர் அணி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
தொடர்ந்து மூன்றாம் நான்காம் இடங்களை தீர்மாணிக்கும் போட்டி தண்ட உதை மூலமான போட்டியாக இடம்பெற்றது. குறித்த போட்டியில் வெற்றிபெற்ற முகத்துவாரம் லைற்ஹவுஸ் அணி மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொள்ள குருந்தையடிமுன்மாரி ரென்ஸ்டார் அணி நான்காம் இடத்தினை பெற்றுக்கொண்டது.
அடுத்து விளாவூர் யுத்தம் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா அணியும், மகிழடித்தீவு மகிழை இளைஞர் அணியும் மோதியிருந்தனர்
இதில் தண்ட உதை மூலம் 04:02 என்ற கோள்கள் அடிப்படையில் மகிழடித்தீவு மகிழை இளைஞர் அணி முதலாம் இடத்தினை பெற்றுக்கொள்ள இரண்டாம் இடத்தினை முனைக்காடு இராமகிருஸ்ணா அணி பெற்றுக்கொண்டது.
உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் சிறந்த வீரனாக மகிழடித்தீவு மகிழை இளைஞர் அணியின் தயானந்தனும், சிறந்த பந்துக் காப்பாளராக முனைக்காடு இராமகிருஸ்ணா அணியின் பந்து காப்பாளர் குமணன் தெரிவு செய்யட்டனர்.
இறுதியில் வெற்றிபெற்ற கழகங்களுக்கு வெற்றிக்கிண்ணம் மற்றும் பணப்பரிசில்கள் அதிதிகளினால் வழங்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி என்.முகுந்தன் அவர்கள் மற்றும் கௌரவ விருந்தினராக மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திரு.எஸ்.சண்முகராஜா அவர்களும் கலந்துகொண்டனர்.
அத்தோடு மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.வீ.ஈஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் திரு.எம்.உதயகுமார், மண்முனை மேற்கு பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் திரு.பி.ரூபராஜ், முதலைக்குடா மகா வித்தியாலய அதிபர் திரு.ரி.கோபாலப்பிள்ளை உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.





