மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 2019 சிறுபோகத்து நெற்செய்கையில் அறுவடை செய்யப்படவுள்ள நெல்லை அரசாங்கதினால் கொள்வனவு செய்வதற்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்ளும் விசேட கூட்டம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இவ்வருட பெரும்போகத்தில் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ள நெல்லை விற்பனை செய்ய அரசாங்கம் அனுமதி வழங்காததினால் ஏற்பட் டுள்ள களஞ்சியத்தட்டுப்பாட்டினைப் போக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராயப்பட்டு இதற்கென பிரதேச செயலக பிரிவுகளில் பயன்படுத்தப்படாத கட்டிடங்களை முதல் கட்டமாக பயன்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
இத்துடன் 2018-2019 பெரும்போக நெல்செய்கைக்கு இம்மாவட்டத்துக்கு தேவையான உரமானியத்தை முன்கூட்டியே ஆயத்தம் செய்வதென்றும், வறட்சியால் பாதிக்கப்பட்ட நெல்வயலுக்குரிய விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டுப்பணம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினை துரிதப்படுத்துவதற்கும் எதிர் காலத்தில் மழைநீரை வீண் விரயம் செய் யாது தேக்கிவைப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது
இந்த விசேட கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்.திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்கள் நெல்சந்தைப்படுத்தும் சபையின் பிராந்திய முகாமையாளர் திரு.எம்.எல்.டீ.எஸ் கருணாதிலக ,பிரதம கணக்காளர். திரு.கே.ஜெகதீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திரு.வை.வீ.இக்பால்,கமநலசேவைகள் பிரதி ஆணையாளர் திரு.கே.ஜகன்னாத், விவசாய விரிவாக்கல் பிரதிப் பணிப்பாளர் , திரு. எஸ்.பேரின்பராசா, கமநலகாப்புறுதி பணிப்பாளர் திரு.கே.பாஸ்கரன், தேசிய உரச்செயலக உதவிப் பணிப்பாளர் திரு.எஸ்.சிராஜுதீன் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.





