01 resized

இலங்கை அரசின் அங்கீகாரத்தில் உலக உணவுத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வறுமை ஒழிப்புத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் அமுலாகின்றன.

இதற்கமைவாக இம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வறுமை ஒழிப்புத் திட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் உலக உணவுத் திட்டத்தின் இலங்கை நாட்டிற்கான பணிப்பாளர் அப்துர் றஹீம் சித்தீக்கியின் பங்குபற்றுதலுடன் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந் அவர்களது தலைமையில் 24.08.2022 ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

தென்கொரியா நாட்டின் 16 மில்லியன் அமேரிக்க டொலர் நிதிப்பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் இத்திட்டம் நாட்டின் மட்டக்களப்பு, மொணராகல, மாத்தளை, மன்னார், முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களில் அமுல்படுத்தப்படுகின்றன.தற்பொழுது மேற்கொள்ளப்படும் இரண்டாங்கட்ட திட்டத்தில் பெருமளவு போசாக்கான உணவு வழங்கும் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இக்கலந்துரையாடலில் கடந்த பெரும்போகம் மற்றும் சிறுபோக வேளான்மை செய்கையின் அறுவடையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.

இத்திட்டத்தினூடாக இம்மாவட்டத்தின் விவசாயக் கிணறுகள் திருத்தம், சிறு குளங்கள் திருத்தம், கோழி வளர்ப்பு, வீட்டுத்தோட்டம், வாய்கால் துப்பரவு செய்தல், நெசவு தொழில் பயிற்சி, விவசாய உள்ளீடுகள் வழங்கள், ஆடு வளர்ப்பு, சிறிய அளவிலான பால்உற்பத்தி, உட்பட வாழ்வாதார செயற்றிட்டங்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன்.

இவ்வாண்டு இத்திட்டத்தினூடாக 22.67 மில்லியன் செலவில் 14 குளங்கள் திருத்தம் செய்யப்பட்டு விவசாயத்திற்குத் தேவையான நீர்ப்பாசனம் வழங்கப்பட்டுள்ளதுடன் இதுவரை இத்திட்டத்தினூடாக 99.33 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளன.2018 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆம் ஆண்டுவரையான இத்திட்டம் இவ்வாண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

இக்கூட்டத்தின்போது உலகஉணவுத் திட்டத்தின் அரசபங்காளி  இணைப்பு உத்தியோகத்தர் முஸ்தபா நிஹ்மத் தலைமையிலான அதிகாரிகளும், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திருமதி. இந்திரா மோகன், மாவட்டதிட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, வவுணதீவு பிரதேசசெயலாளர் திரு.எஸ். சுதாகரன், கமநலசேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர்திரு. கே. ஜெகநாத், விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திரு.வீ.பேரின்பராசா, உதவிதிட்டமிடல் பணிப்பாளர் திரு.ஆர். ஜதீஸ்குமார் உட்பட பலதிணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

01 resized 02 resized 03 resized 04 resized

05 resized 06 resized