WhatsApp Image 2022 08 24 at 8.03.02 AM

மட்டக்களப்பில் அரச கட்டுப்பாட்டு விலைக்கு கூடுதல் விலையில் முட்டைகளை விற்பனை செய்த வர்த்தக நிறுவனங்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன. அரச கட்டுப்பாட்டு விலைக்கு அமைவாக மாவட்டத்தின் பல பாகங்களிலும் முட்டைகள் விற்பனை செய்யப்படவில்லையென மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்களுக்கு  கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து இச்சுற்றி வளைப்புகள் 24.08.2022 ஆம் திகதி  இடம்பெற்றன.

அரசாங்க அதிபர் திரு. க. கருணாகரன் அவர்களின்  வழிகாட்டலின்கீழ் மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் இந்த விசேட சுற்றி வளைப்பு மேற்கொண்டிருந்தனர். இதன்போது மட்டக்களப்பு நகரம், மட்டக்களப்பு சந்தை, ஏறாவூர் பிரதேசம், மற்றும் ஏறாவூர் சந்தை ஆகிய பிரதேசங்களிலுள்ள வர்த்தக நிலையங்களில் சுற்று வளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

இதன்போது அரச கட்டுப்பாட்டு விலையினைவிட அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், பல  வியாபாரிகளுக்கு அறிவுரைகளும்  எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் மாவட்டத்தின் பல பாகங்களிலும் அரச கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்கின்ற வியாபாரிகள் தொடர்பாக தகவல் திரட்டப்படுவதுடன், அப்பகுதிகளில் திடீர் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ள அரசாங்க அதிபர் அவர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கட்டுப்பாட்டு விலையினைவிட அதிக விலைக்கு முட்டை வியாபாரம் செய்கின்ற வியாபாரிகளுக்கெதிராக நீதிமன்றத்தின் ஊடாக குறைந்தது ஒரு லட்சம் தொடக்கம் 5 லட்சம் ரூபா வரை தண்டப் பணம் விதிக்க முடியும் எனவும் மேலும் ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என்றும் நுகர்வோர் அலுவலக சம்பந்தமான அதிகார சபை மாவட்ட உதவி பணிப்பாளர் ஆர்.எப்.ஏ. அன்வர் சதாத் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் மட்டக்களப்பு  மாவட்டம் பூராக சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்பட  உள்ளதால் முட்டை வியாபாரம் செய்கின்ற வியாபாரிகள் அரச கட்டுப்பாட்டு விலைக்கு அமைவாக விற்பனை செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படும் என்வும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினால் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 43 ரூபாவும்,  சிவப்பு முட்டை ஒன்றின் விலை 45 ரூபா எனவும் அரசாங்கத்தினால் உயர்ந்த பட்ச கட்டுப்பாட்டு விலையாக விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2022 08 24 at 8.03.05 AM WhatsApp Image 2022 08 24 at 8.03.03 AM 1 WhatsApp Image 2022 08 24 at 8.03.02 AM WhatsApp Image 2022 08 24 at 8.03.04 AM