
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெண் தலைமைதாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் சுயதொழில் ஊக்குவிப்புக்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வு 29.08.2022 ஆம் மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது. வலுவூட்டுவதனூடாக மாற்றியமைத்தல் எனும் தொனிப்பொருளில் கிழக்கு சமூக அபிவித்தி மையம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்துவரும் திட்டத்தின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து வறுமைகோட்டின் கீழ் வாழும் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் சுயதொழில் ஊக்குவிப்புக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நான்கு பிரதேச செயலக பிரிவுகளின் பேரில்லாவெளி, குடும்பிமலை, மங்கலகம, காத்தான்குடி, ஆரையம்பதி கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார நிதி உதவிகள் வழங்கும் நிகழ்வு கிழக்கு சமூக அபிவிருத்திமையத்தின் ஏற்பாட்டில் ஸ்கோர் நிகழ்ச்சிதிட்டத்தின் ஊடாக கிழக்கு சமூக அபிவிருத்தி அமைப்பின் பணிப்பாளர் புஹாரி மொகமட் தலைமையில் பயனாளிகளுக்கு சுமார் ஒரு இலட்சத்தி எழுபது ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கருணாகரன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வி.வாசுதேவன், ஆரையம்பதி பிரதேச செயலாளர் திரு.என்.சத்தியானந்தி, மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு.எஸ்.அருள்மொழி, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என மேலும் பலர் கலந்து கொண்டு நிதி உதவிகளை வழங்கிவைத்துள்ளனர்.
இந்நிகழ்வில் கிழக்கு சமூக அபிவித்தி மையத்தின் உத்தியோகத்தர்கள் உட்பட பேரில்லாவெளி, குடும்பிமலை, மங்கலகம, காத்தான்குடி, ஆரையம்பதி கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் என அதிகளவிலானோர் இதன்போது கலந்துகொண்டுள்ளனர்.







