நாடெங்கும் செயல்படும் சிறுவர் இல்லங்களின் முகாமைத்துவங்களை மேலும் மேம்படுத்தி இல்ல சிறார்களின் எதிர்காலத்தினை மேலும் சிறப்பாக கொண்டுவர தேவையான உளவளப்படுத்தல் நடவடிக்கையினை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தற்போது மேற்கொண்டு வருகின்றது.
சிறுவர் மற்றும் மகளீர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டாரவின் ஆலோசனைக்கமைய எடுக்கப்பட்டுவரும் இந்த நடவடிக்கைக்கமைய ஆரம்பக்கட்டமாக அரச நியதிகளுக்கமைய செயல்படும் சிறுவர் இல்லங்களின், முகாமையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் சிறுவர் நலன் அரச சேவை உத்தியோகத்தர்களுக்கு விசேட பயிற்சி செயலமர்வுகளை நடாத்தி தேவையான அறிவூட்டல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விசேட திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயல்படும் சிறுவர் இல்லங்களின், முகாமையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் சிறுவர் நலன் அரசசேவை உத்தியோகத்தர்களுக்கு விசேட உளவளப்படுத்தல் செயலமர்வு 18.07.2019 அன்று மாவட்ட செயலகத்தில் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி.நிசாரியாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த உளவளப்படுத்தல் செயலமர்வினை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வைபவ ரீதியாக ஆரம்பம் செய்துவைத்தார்.
இதில் மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் திரு.ஏ.நவேஸ்வரன், மகப்பேற்று நிபுணர் கலாநிதி திரு.என்.திருக்குமார், சிரேஸ்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி திரு.எம்.எச்.நஜுமுதீன் உட்பட பல சிறுவர் நலன் சேவை அதிகாரிகள் வளவாளர்களாகக் கலந்து கொண்டு போதிய அறிவூட்டல்களை வழங்கியதாக மாவட்ட அரச ஊடகப்பிரிவு தகவல் மேலும் தெரிவிக்கின்றது.
இங்கு கருத்து வெளியிட்ட மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்கள் எமது மாவட்டத்தில் செயல்படும் சிறுவர் இல்லங்களைப் பொறுத்த அளவில் முறைப்பாடுகள் வராமல் இருப்பதற்கு நிருவாகிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பதுடன் சிறார்களின் எதிர்காலத்தை சிறப்பாகக் கொண்டுவர வேண்டுமென்பதில் அரசாங்கம் அக்கறை கொண்டிருப்பதாகவும், இதற்கமையவே அரசாங்க அதிபர் சிறுவர் இல்லங்களை விசேட மேற்பார்வைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்து கண்டறியப்பட்ட இடைவெளிகளை நிவர்த்திப்பதே இந்த செயலமர்வின் நோக்கமாகுமென தெரிவித்தார்.






