ஆரம்பக்கைத்தொழில் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டுதலின் பேரில் சமூக சேவைத்திணைக்களம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மதிப்பீடு செய்யும் இவ் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் மாவட்ட விளையாட்டு விழா மட்டகளப்பு வெபர் விளையாட்டுஅரங்கில் கடந்த 03.08.2019 சனிக்கிழமை வெகு விமர்சையாக இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து சுமார் 500 மாற்றுத்திறனாளிகள் பங்கு கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர். இங்கு வகைப்படுத்தப்பட்ட ஆண், பெண் மாற்றுத்திறனாளிகள் ஓட்ட நிகழ்வுகள், நீளம், உயரம் பாய்தல், குண்டு, பருதி வீசுதல், அஞ்சல் ஓட்டம், மற்றும் பாரம்பரிய பல விளையாட்டு நிகழ்வுகளிலும் பங்கேற்றனர்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இப்போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாற்றுத்திறனாளிகளுக்கு திறமைச்சான்றிதழ்களையும் சிறப்புப்பரிசில்ளையும் வழங்கி வைத்தார். அத்துடன் இப் போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்ட சகல மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்புப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இம் மாவட்ட போட்டி நிகழ்வுகளில் முதல் இடங்களை பெற்ற இவ் ஆண்டுக்கான மாற்றுத்திறனாளிகள் இவ்வாண்டின் தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்க தகுதி பெற்றதாக மாவட்ட சமூக சேவை உத்தியோகஸ்தர் திருமதி.சந்திரகலா யோகேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட காணிப்பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்சனி முகுந்தன் அவர்கள், மாவட்ட கணக்காளர் திரு.கே.கேதீஸ்வரன் அவர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்னியமூர்த்தி அவர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச சேவை பணியாளர்கள் மாற்றுத்திறனாளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.





