மட்டக்களப்பு புராதன ஒல்லாந்தர் கோட்டையை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதற்கான உயர்மட்ட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் டி.குஷித்த மென்டிஸ் பங்குபற்றுதலுடன் பழைய மாவட்ட செயலகத்தில் 03.06.2025 அன்று இடம்பெற்றது. மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நகரின் மத்தியில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டையை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதற்கு 40 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சின் நிதி உதவியின் கீழ் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக ஒல்லாந்தர் கோட்டையினை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
ஒல்லாந்தர் கோட்டையை புனர்நிர்மானம் மேற்கொள்ளல் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக உயர் மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் என்.தனஞ்செயன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், தொல்பொருள் திணைக்கள உயர் அதிகாரிகள், மாவட்ட சுற்றுலாத் துறை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஏ.விவேகானந்தராஜ், திருமதி. மரினா உமேஸ் என பலர் கலந்து கொண்டனர்.





