மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உலக வங்கியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள காலநிலைக்கு சீரமைவான நீர்பாசன விவசாய அபிவிருத்திக்கான கலந்துரையாடல் கடந்த 09.10.2019 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலாளரின் கலந்துரையாடல் மண்டபத்தில் நடைபெற்றது.

காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய அபிவிருத்தி திட்டமானது இலங்கையில் 11 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதில் மட்டக்களப்பு மாவட்டமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு இவ் வேலைத்திட்டத்தின் கீழ் முந்தானை ஆறு அணைக்கட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டு திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்திற்காக மொத்தமாக 140 மில்லியன் ரூபா அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான விவசாயிகளின் பங்களிப்புக்காக 125 மில்லியன் ரூபா அமெரிக்க டொலர்களும், இலங்கை அரசினுடைய நிதியாக 10 மில்லியன் ரூபா அமெரிக்க டொலர்களுமாக இத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 11 மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான விசேட வேலைத்திட்டமானது தொடர்ந்து வெள்ளம், வரட்சி போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படுகின்ற மாவட்டங்களுக்காகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய திட்டத்திற்கு மாவட்டத்தின் பங்குதாரர்கள் அனைவரையும் இணைந்த வகையில் இவ்வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

உலகவங்கியின் கால நிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் மூலமாக நாட்டு மக்களின் விவசாய உற்பத்தி திறனை மேம்படுத்தி நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம் மூலமான தன்நிறைவை காண்பதாகும். இத்திட்டத்தினை முக்கிய கருப்பொருளாக கொண்டு நாட்டினை செழிப்புற கட்டியெழுப்புவதாகவே இத்திட்டம் அமைகின்றது.

இத்திட்டத்தின் கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, உலக வங்கி திட்டத்தின் நிபுணர் திரு.சி.மனோகரன், திட்டப்பணிப்பாளர் பொறியியலாளர் என்.சிவலிங்கம் மற்றும் பிரதி பணிப்பாளர் திரு.ர.ம.ஆரியதாச அத்தோடு திரு.மொகமட் அமின், உலக வங்கியின் நிதி முகாமைத்துவ நிபுணர் திரு.சரத் விக்கிரமசிங்க, உலக வங்கியின் சிரேஸ்ட ஆலோசகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

DSC 0285 resizedDSC 0287 resizedDSC 0277 resizedDSC 0286 resizedDSC 0292 resizedDSC 0310 resized