சாரணிய இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவுளின் 163 வது ஜனன தினம் மட்டக்களப்பு நகரில் பெருமளவு சாரணிய மாணவர்களின் பங்கேற்புடன் சிறப்பாக 22.02.2020 அன்று கொண்டாடப்பட்டது.
மாவட்ட சாரணியர் ஆணையாளர் திரு.வி.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த ஜனன நிகழ்வினை மாவட்ட சாரணிய சங்கத்தின் தலைவரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி.கலாமதி பத்மராஜா அம்மணி அவர்கள் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு நீரூற்று பூங்காவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நிகழ்வுகளைச் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வின் போது மாவட்ட ஆணையாளர் திரு.பிரதீபன் இங்கு நிறுவப்பட்டுள்ள சாரணியத்தின் தந்தை பேடன் பவுளின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து கௌரவப்படுத்தினார்.
இதன் பின்னர் வின்சன்ட் உயர்தர தேசிய பாடசாலையில் நடைபெற்ற ஜனன தின நிகழ்வில் அரசாங்க அதிபர் சாரணிய ஸ்தாபகரின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து முன்னாள் மாவட்ட ஆணையாளரும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளருமான திரு.சரவணமுத்து நவநீதன் பிறந்த நாள் கேக்கினை சம்பிரதாய பூர்வமாக வெட்டி அங்கத்தலைவர்களுக்கு ஊட்டினார்.
இந் நிகழ்வில் அரச அதிபர் கருத்து வெளியிடுகையில் இம்மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் சாரணிய அமைப்பில் பெருமளவினர் இணைந்திருப்பது எமக்கு மகிழ்வினைத் தருகிறது. சாரணிய உடையில் சாரணியர்களை பார்ப்போமானால் சாரணி
யர்களின் மனக்கம்பீரம் தோன்றும். இதில் இணைந்து மாணவர்கள் கல்விக்கு அப்பால் வாழ்க்கைக்குத் தேவையான நல்ல பயிற்சிகளை இந்த சாரணிய இயக்கம் பெற்றுத் தரும் எனக்குறிப்பிட்டார்.





