WhatsApp Image 2022 09 05 at 01.00.43

47 வது தேசிய மட்ட விளையாட்டு விழாவிற்கு முன்னோடியாக நடாத்தப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மட்ட விளையாட்டு விழாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில்    66 தங்கப்பதக்கங்களைப் பெற்று மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு சம்பியனாக தெரிவாகியுள்ளது.

 

வருடாந்தம் மாவட்ட மட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளுக்கிடையில் நடாத்தப்படும் குழுநிலை மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் இவ்வாண்டும் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெபர் விளையாட்டு மைதானத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

அதேவேளை 13 தங்கப்பதக்கங்களைப் பெற்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவு இரண்டாம் இடத்தினையும் தம்வசப்படுத்தியுள்ளது.அத்தோடு மெய் வல்லுநர் போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவு முதலாமிடத்தினையும், இரண்டாம் இடத்தினை ஆண்கள் பிரிவில் கோறளைப்பற்று மேற்கு பிரிவும், பெண்கள் பிரிவில் மண்முனை வடக்கு பிரிவும்  தம்வசப்படுத்தியுள்ளது. 

குறித்த விளையாட்டு விழாவின் இறுதி நாள் பரிசளிப்பு நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி.நவரூபரஞ்ஜினி முகுந்தன்தலைமையில் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்பரனின் ஒழுங்கமைப்பில் வெபர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளதுடன், வெற்றியாளர்களுக்கான பரிசில்களை வழங்கி, தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை சுவட்டு மற்றும் மைதான நிகழ்வுகளில் சிறந்த வீராங்கனையாக மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவை சேர்ந்த செல்வி.எச்.ஈ.அவுட்ஸ்கோனிற்கும், சுவட்டு நிகழ்வுகளில் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த ஏ.எல்.அஹமட் அரீஜ் சிறந்த வீரராகவும், மைதான நிகழ்வுகளில் சிறந்த வீரராகவும், மெய்வல்லுநர் போட்டிகளில் அதிசிறந்த வீரராகவும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த எம்.கதுஸ்கர் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், 5 சிறப்பு விருதுகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்விற்கு கிழக்கு பல்கலைக்கழகத்தின் உடற்கல்வித்துறைப் பணிப்பாளர் திருமதி.ஆர்.புவனசிங்கம் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்கள், பயிற்றுவிப்பாளர்கள், கழகங்களின் உறுப்பினர்கள் என மேலும் பலர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

WhatsApp Image 2022 09 05 at 01.00.42 2 WhatsApp Image 2022 09 05 at 01.00.43 WhatsApp Image 2022 09 05 at 01.00.42 1 WhatsApp Image 2022 09 05 at 01.00.44