கடின பந்து கிரிக்கட் சமரில் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி பாடசாலை அணி இவ்வாண்டுக்கான சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. இப்போட்டி நிகழ்வுகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் மற்றும், மட்டக்களப்பு மறைமாநில ஆயர் கலாநிதி திரு.ஜோசெப் பொன்னையா அவர்களும் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி தேசிய பாடசாலை அணிக்கும் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி தேசிய பாடசாலை அணிக்குமிடையில் முதல் முறையாக நடைபெற்ற 5௦ ஓவர் கொண்ட சிநேகபூர்வமான கடினபந்து கிரிக்கட் சமரில் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி தேசிய பாடசாலை அணி இவ்வாண்டுக்கான சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி தேசிய பாடசாலை அணியின் திரு.எம்.பிரந்தாவணன் தெரிவானார் . ௦3 விக்கட்டுகளை இவர் வீழ்த்தியதுடன் 27 ஓட்டங்களையும் பெற்றிருந்தார். சிறந்த களத்தடுப்பு வீரராக திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி தேசிய பாடசாலை அணியின் திரு.என்,எஸ்.ஜதுர்சன், மற்றும் சிறந்த பந்து வீச்சாளராக மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி, தேசிய பாடசாலை அணி திரு.எஸ்.துஜிதரன், சிறந்த துடுப்பாட்ட வீரராக மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி தேசிய பாடசாலை அணி ஏ.பிரலாளன் ஆகியோரும் தெரிவாகினர்.
இதன் பரிசளிப்பு விழாவில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் திரு.ஏ, கே.மன்சூர், ஹட்ஸ் வலையமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.திருக்குமார் நடராசா, பொது முகாமையாளர் திரு. மனோஜ், மோசஸ், மாவட்ட விளையாட்டு அதிகாரி திரு.வீ.ஈஸ்பரன், கோட்டமுனை விளையாட்டு கிராம தலைவர் திரு.இ.சிவநாதன், யேசுசபை உதவி மேலாளர் திரு.அருட்சகோதரர் போல் சற்குணநாயகம் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டு பரிசில்களையும் வெற்றிக் கிண்ணங்களையும் வழங்கி வைத்தனர்.





